இளங்கலையில்
இயற்பியலை
இலக்காகக்
கொண்டவரே!
தாய்மொழிப் பற்றில்
தமிழிலக்கியங்களோடு
வாழ்ந்தவரே!
முதுகலையில்
பச்சையப்பனின்
பாசறையில்
பைந்தமிழோடு
பழகி
முத்தமிழோடு
விளையாடிய
முத்துகுமரனே!
விருப்பம் தேற்றி
பல வீணைகள் மீட்டிய
பாடல்களை
ஆய்வாகக் கொண்டு
சென்னை பல்கலையில்
முனைப்போடு
முனைவர் பட்டம் பெற்றவரே!
அன்பூட்டும்
அறிவுமதியின்
ஆலோசனையில்
பாடலியற்றப்
பயின்றவரே!
அறியா வயதிலே
உன் அன்னையின்
அன்பு கூட
அரிதாகி விட்டதால்
உன் அன்பு சிறக்க
ஆற்றல் மேம்பட
நல்ல பண்பு தழைக்க
ஊக்கத்தைப்
பரிமாறியது
அன்னை நூலகம்
உன்னை
எப்போதுமே
சுற்றி வந்தது
நண்பர்கள் கூட்டம்
மட்டுமல்ல
நீ நட்பு கொண்ட
இலக்கியமும் தான்
உன் அறை
பொருட்கள்
நிறைந்தது அல்ல
புத்தகம்
நிறைந்தது
இயக்குனராவது
உனது எண்ணம்
பல இசைகளுக்கு
பாடல் இயற்றி விட்டது
உன் கைவண்ணம்
உன் பாடல்
பலர் இதயங்களுக்கு
பல்லாக்கு
எல்லோருக்கும்
முதல் எழுத்து அ
நீ மீட்டிய ஆனந்த யாழும்
நீ தீட்டிய அழகும்
உன்னை
தேசிய விருதுக்கு
அழைத்துச் சென்ற
அதிர்ஷ்ட எழுத்துகள்
ஆ,அ
உன் குடும்பம்
இழந்தது என்னவோ
உன்னைத்தான்
கலையுலகம்
இழந்து விட்டதோ
இன்னும்
எண்ணில் அடங்காத
உன் எண்ணத்தில்
உதிக்கவிருந்த
பாடல்களை
உன் உயிரை
எடுத்தவனால்
எடுக்க முடியுமா
ஏட்டில் பதிந்த
உன் கவிதைகளையும்
இசையில் கலந்த
பாடல்களையும்?!
வீரநடையில் தான்
உன் பாடல்
நடை தொடங்கியது
மூங்கில் மரமாய்
வளர்ந்த உன்னை
விதி வந்து
வேரறுத்து விட்டதே!
மஞ்சள் காமாலையை
மனு அனுப்பி
உன்னை வாங்கி விட்டதே
மரணம்!
காஞ்சி கன்னிகாபுரத்து
கவிதை நாயகனே!
நீ கண்மூடி
எங்களைக்
கண்கலங்க
வைத்து விட்டாயே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக