திங்கள், 17 ஜூலை, 2017

இமயமும் இளைய தலைமுறையும்

சிவாஜி - சில நினைவலைகள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்... ஈடிணையற்ற தமிழ்த் திரையுலகின் நடிப்புக்கலை சக்கரவர்த்தி.நாளும் வந்து போகும் நட்சத்திரங்களுக்கு நடுவில் நானிலம் போற்றும் சூரியன்.அவரது திரையுலக வாழ்வில் திரும்பிப் பார்க்க எத்தனையோ அத்தியாயங்கள் இருந்தாலும் சிறப்பு மிக்கது அவரது முதிர்ந்த பருவம்.அதில் அவர் பங்காற்றிய இனிமையான இளையோருடனான இணைப்பு. அவரது பிறந்த நாள் அக்டோபர் 1(1928).


தசாவதாரத்துக்கு நடைபயில வழிவகுத்த நவராத்திரி நாயகனாக, GODFATHERக்கே பாடம் சொன்ன தெய்வமகனாக அவரது சாதனைகள் உச்சம் தொட்டவை.

ஒருகூற்று நாடகக்காட்சி (Dramatic Monologue) போன்ற நாடகத்தமிழின் நயங்களைத் தன் திரைப்படங்களில் திகட்டத் திகட்டப்  படைத்துக் காட்டிய பயணம் நிகழ்ந்தது அந்த ராஜபார்ட் ரங்கதுரையின் ராஜபாட்டையில் தான். 

அத்தனையும் தாண்டி வந்து இளைய மகன் பிரபுவை அறிமுகப்படுத்தி விட்டு இளைப்பாறும் சமயம் அந்த இமயத்துக்கு இளைய தலைமுறை இனிய கலைஞர்கள் செலுத்திய முதல் மரியாதை தான் அவரது தனிச்சிறப்பாகும்.

தாவணிக்கனவுகள் - 14.9.1984

"ஒரு இமயத்துடன் இணைவதில் பெருமைப்படுகிறோம்" என்று டைட்டில் போட்டே சிவாஜியை கேப்டன் சிதம்பரமாக அறிமுகம் செய்தார் எம்ஜியாரின் கலையுலக வாரிசாக எம்ஜியாரே கூறிய திரைக்கதை மன்னர் கே.பாக்யராஜ்.இது எம்ஜியார்-சிவாஜி இடையே இருந்த நட்பின் சான்றாகத் திகழும் நிகழ்ச்சிகளில் ஒன்று.


வீரபாண்டிய கட்டபொம்மன் கப்போலோட்டிய தமிழன், பகத் சிங், திருப்பூர் குமரன் என்று பல வரலாற்று வீரர்களின் வேடங்கள் போட்ட சிவாஜியை வீரத்தின் விளைநிலம், எத்தனையோ போராளிகளின் போர்க்குரலுக்கு உரமூட்டிய உன்னத வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வேடமணிந்து தோன்றச் செய்தார் கே.பாக்யராஜ்.



“எமனுக்கு வாகனம் எதுன்னு கேட்டா எருமக்கடான்னு சொல்ல தெரியுதுல்ல. தேசத்த்துக்காக உயிர்விட்ட ஒரு தியாகியினுடைய பேர் தெரியாது உனக்கு” என நடிகர் திலகத்தின் வாயிலாக பாக்யராஜ் வைத்த "பஞ்ச்" சமுதாயத்தைச் சாடி சிந்திக்க தூண்டுவது.

படத்தின் உதவி இயக்குனர் பார்த்திபன் தன் அறிமுக வேடத்தில் 

.

பந்தம் - 26.1.1985

நடிகர் திலகத்துக்கும் கலையுலகத்துக்கும் உள்ள பந்தம் அவருக்கடுத்த இளைய தலைமுறையோடு மட்டுமல்ல, மலரப்போகும் அரும்பாம் புதிய தலைமுறையோடும் நீளும் என்பதற்கு உதாரணம், பேபி ஷாலினிக்கு தாத்தாவாக சிவாஜி நடித்த இந்த பந்தம். 1985ல் குடியரசு நாளன்று வெளியான பந்தம் சிவாஜியின் நடிப்புக்கு சிறந்த சான்று.







தியாகம், திரிசூலம் போன்ற சிவாஜியின் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய        கே விஜயன் ரத்தபாசம் படத்தின் போது விலகி பந்தம் படத்தில் மீண்டும் இணைந்தார். தப்பைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பு என்பது மிகவும் அரிதானது. அக்காலம் கடந்து நாம் திருந்தினாலும் பலனில்லை என எச்சரித்த படம் இது.

நீதியின் நிழல் - 13.4.1985.

சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏற்கனவே சந்திப்பு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் கதாநாயகனாக நடித்த முதல் படம் இது தான்.   சிவாஜி கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அன்று இரட்டை இயக்குனர்களாக செயல்பட்டுக் கொண்டிருந்த பாரதி - வாசு இப்பபடத்தை இயக்கினார்கள்.



முதல் மரியாதை 15.8.1985

16 வயதினிலே மூலம் தமிழ் சினிமாவிற்கு புதிய ரத்தம் பாய்ச்சிய பாரதிராஜா சிவாஜியுடன் இணைந்து படைத்த படம் முதல் மரியாதை.

"உங்கவேஷம்தான் கொஞ்சம் மாறணும்
 எங்க சாமிக்கு மகுடம் ஏறணும் "

என்று சிவாஜிக்கு தேசியவிருது பெற்றுத்தரும் இலட்சிய ஆசையுடனே இப்படத்தை செதுக்கிச் செதுக்கி எடுத்திருந்தார் பாரதிராஜா. நடிகர் திலகத்துக்கு இப்படம் ஒரு புதிய அனுபவம். 1971 ல்  வெளியான மூன்று தெய்வங்கள் படத்திற்குப் பிறகு இதில்தான் 'விக்' இல்லாமல் நடித்தார். ஒப்பனை இல்லாமல் இயல்பான ஒரு மனிதராக திரையில் தோன்றினார் சிவாஜி.

சிவாஜி இளவட்டக்கல்லைத் தூக்குவதும் அதற்கு இளையராஜாவின் பின்னணி இசையும் சிறப்பு. ராதாவுக்கு பின்னணிக்குரல் ராதிகா. வைரமுத்து ஏழாவது தேசியவிருது  வாங்கித் தமிழழுக்குப் பெருமை சேர்க்க முதல் தேசியவிருது மூலம் பெருமை பெற்ற படம் முதல் மரியாதை.








 படிக்காதவன் - 11.11.1985

சிவாஜி கணேசனின் அபிமான நடிகர்களில் ஒருவராக விளங்கியவர் சஞ்சீவ் குமார். சஞ்சீவ்குமாருடன் சிவாஜி பாராட்டிய நட்பு பெருமை மிக்கது. நவராத்திரி திரைப்படத்தை இந்தியில் நடித்தவர்  இந்தியாவின் இணையற்ற நடிகர் சஞ்சீவ் குமார்.

பாரதவிலாஸ் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் நட்புக்காக சஞ்சீவ் குமார் தோன்றும் காட்சி 






அத்தகு பெருமைமிக்க கலைஞன் சஞ்சீவ் குமாரும் அமிதாப் பச்சனும் அருமைச் சகோதரர்களாக நடித்த Khud-Daar படத்தின் தமிழ் ரீமேக் தான் படிக்காதவன். சஞ்சீவ் குமார் மறைந்து 5 நாட்கள் கழித்து இப்படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

சாதனை - 10.6.1986

நடிகர் திலகம் திரைப்பட இயக்குனராக நடித்த படம் சாதனை.இப்படத்தில் இளையராஜா ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார்.பிரபு,நளினி போன்ற கலைஞர்கள் நடிகர் திலகத்திடமிருந்து நடிப்பைக் கற்றுக் கொள்வதாக அமைக்கப்பட்ட காட்சிகள் சிறப்பு.பேராசியர் ஏ.எஸ்.பிரகாசம் இயக்கிய சில படங்களில் இதுவும் ஒன்று.




  
கே.விஜயனின் திடீர் விலகல் காரணமாக 1980ல் வெளிவந்த ரத்தபாசம் திரைப்படத்தை சிவாஜி இயக்கியிருந்தார் என்பதும் அப்படத்தின் கதை சிவாஜியின் மகன் ராம்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

விடுதலை - 11.4.1986

பெரோஸ் கானின் தயாரிப்பில் 1980ல் வெளியான குர்பானி இந்திப்படத்த்தின் தமிழ் மொழியாக்கமே விடுதலை.அம்ஜத்கானின் அசத்தலான வேடத்தில் சிவாஜி நடித்தது அம்ஜத்கானின் 15 ஆண்டுகால கலையுலக வாழ்க்கைக்கு மிகப்பெரிய பெருமை.

வினோத் கன்னா நடித்த இன்னொரு முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் நடித்திருந்தார்.





சாதாரணமாக இந்திப்படங்களை ரீமேக் செய்கிறபோது நம் படங்கள் அதனை மிஞ்சும் வகையில் தயாரிக்கப்படுவதில்லை.ஆனால் விடுதலை திரைப்படம் அதற்கு விதிவிலக்காக மிகப்பெரும் பொருட்செலவில்  தயாரிக்கப்பட்டது. கே.பாலாஜி மொழிமாற்று படங்களைத் தயாரிப்பதையே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டவர்.அவர் இந்த படத்தை Master Piece  ஆக உருவாக்கி இருந்தார்.

அம்ஜத்கான்-பெரோஸ்கான்-ஜீனத் அமன் நடித்து கல்யாண்ஜி-ஆனந்த்ஜி இசையமைத்த   "லைலா ஓ லைலா" என்ற பாடலை சிவாஜியுடன் ரஜினி-மாதவி நடிக்க   "ராதாவே ராதா" என்று அப்படியே தமிழுக்கு மாற்றியிருந்தார் இசையமைப்பாளர்  சந்திரபோஸ்.

சிவாஜிக்கு சர்வதேசப் புகழ்  தந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படக்காட்சியை
நினைவுகூரும் விதமாக இப்படத்தில் கலாட்டாவான ஒரு காட்சி உண்டு.




தாய்க்கு ஒரு தாலாட்டு - 16.7.1986


கேரளாவின் கே.பாக்யராஜ் என்று பெயர் பெற்ற பாலச்சந்திர மேனன் மது, ஸ்ரீவித்யா ஆகியோருடன் தான் நடித்த "ஒரு பைங்கிளி கத" படத்தை ரீமேக் செய்தார்.அதுவே "தாய்க்கு ஒரு தாலாட்டு".15 ஆண்டுகளுக்கு பிறகு சிவாஜி-பத்மினி இணைந்த படத்தில் பாலச்சந்திர மேனன் வேடத்தில் பாண்டியராஜன் நடித்தார்.

படத்தில் "உன்னை ஒன்று கேட்பேன்" புதிய பறவை திரைப்படப் பாடலை ரீமிக்ஸ் செய்து டி.எம்.எஸ்.- சுசீலாவைப் பாடவைத்து பதிவு செய்திருந்தார் இளையராஜா.சுவையான அந்த பாடல் படத்தில் இடம்பெறவில்லை. கடைசி பகுதியை மட்டும் படத்தில் வைத்திருந்தார்கள். பாடல்களை எழுதியவர் வைரமுத்து. இளையராஜா பாடிய டைட்டில் பாடலை எழுதியவர் வாலி.






மண்ணுக்குள் வைரம் - 12.12.86






இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ் குமார் இயக்கிய படம் இது.முதல் மரியாதை படத்தில் அறிமுகமான ரஞ்சனி, முரளி, சுஜாதா நடித்த படமிது. சிவாஜி நடித்த இந்த ஒரே படத்தில் தான் கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை இடம்பெற்றது. இந்த மனோஜ்குமார் தான் அர்ஜுன்,பிரகாஷ்ராஜ் நடித்த வானவில் படத்தையும் இயக்கியவர்.

ராஜமரியாதை - 14-1-1987

ராணி லலிதாங்கி, ராஜா தேசிங்கு, யார் பையன் போன்ற படங்களை இயக்கிய டி.ஆர்.ரகுநாத்தின் மகன் கார்த்திக் ரகுநாத் இயக்கிய படம் இது. கதை வசனம் வியட்நாம் வீடு சுந்தரம். கார்த்திக், ஜீவிதா ராஜசேகர்  நடித்த படத்தில் கார்த்திக்கை கிடுக்கிப்பிடி போடும் முதலாளியாக சிவாஜி கலகலப்பூட்டினார்.



வீரபாண்டியன் - 14.4.1987


விஜயகாந்த்-ராதிகா ஜோடியுடன் சிவாஜி வீரபாண்டியனாக நடித்த இப்படத்தை துரை எழுதி தயாரித்திருந்தார். கார்த்திக் ரகுநாத் இந்த படத்தையும் இயக்கி இருந்தார். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் சிவாஜியுடன் நடித்த கடைசி படம் இது.




ஜல்லிக்கட்டு - 28.8.1987


மணிவண்ணன் இயக்கத்தில், வியட்நாம் வீடு சுந்தரம் கதை-வசனத்தில் சத்யராஜ், ராதாவுடன் இணைந்து நடித்திருந்தார் சிவாஜி.

முதல் மரியாதையின் முக்கிய வேடம் உட்பட சிவாஜியின் சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த சத்யராஜுக்கு hero promotion with sivaji's supervision.




சிவாஜியும் சத்யராஜும் எதிரிகளைப் பழிவாங்குவதாக அமைந்த கதையை மணிவண்ணன் தன் எள்ளல் நடையுடன் சுவையாக இயக்கியிருந்தார். இறுதிக்காட்சியில் சட்டம் தூங்குவதாக உருவகப்படுத்தும் நடிகர் திலகத்தின் நடிப்பு சிறப்பு.

எம்ஜியார் இந்தப்படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். 






இதே போல் எங்கள் தங்கம் படத்தின் தொடக்க விழாவில் சிவாஜி பங்கேற்று இருந்தார்.

ஒரு தடவை நின்னா நூறு தடவை நின்ன மாதிரி




                                             
      

                   




என் தமிழ் என் மக்கள் - 2.9.1988



காங்கிரசிலிருந்து பிரிந்து தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் தொடங்கி ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் நின்று தோற்பதற்கு முன் வந்த அரசியல் படம் இது.

அனந்துவின் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதியது வாலி. இயக்குனர் சந்தான பாரதி.

"ரெட்டை இலையில சோறு போட்டா உங்க கைய ஊனிக்கிட்டு தின்னுவீங்க. சாப்பாடு தீந்து போச்சின்னா இலை கிழிஞ்சிபோச்சின்னு உங்க கையை கழுவிடுவீங்க" என்று சிவாஜி பேசும் வசனம் மீண்டும் பெரும் தலை மறைந்து இலை கிழிந்த இக்கால நிலையிலும் கருதத்தக்கது.






புதிய வானம் - 10.12.1988

சத்யா மூவிஸ் பேனரில் சிவாஜி நடித்த ஒரே படம்.சிவாஜியின் 275வது படமாக விளம்பரப்படுத்தப்பட்டது. கிழக்கு வாசல், பொன்னுமணி போன்ற தரமான படங்களை இயக்கிய ஆர்.வி.உதயகுமாரின் இரண்டாவது படம். எம்ஜியாரை சிறப்பித்து சிவாஜி பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல் காட்சி பேசப்பட்டது.







தேவர் மகன் - 25.10.1992

நடிகர் கமல்ஹாசன் எழுதி தயாரித்த இப்படத்தில் சிவாஜி தேவராகவும் கமல் மகனாகவும் நடித்தனர்.இளையராஜாவின் இசை, பாலுமகேந்திராவின் மூலம் சிவாஜி பெற்ற ஸ்பெஷல் ஜூரி தேசிய விருது என நேர்மறை விஷயங்கள் நிறைய இருந்தாலும் சாதிய உணர்வுகளைத் தூண்டிவிட்ட படம் என்று எதிர்மறை விமர்சனங்கள் எழுந்ததையும் மறுப்பதற்கில்லை.

பி.சி.ஸ்ரீராம், இளையராஜா, இயக்குனர் பரதன் ஆகியோருடன் சிவாஜி,கமல்.








 



பசும்பொன் - 14.4.1995

முதல் மரியாதைக்கு பிறகு பாரதிராஜாவுடன் இணைந்த சிவாஜி கௌரவ வேடத்தில் நடித்த இப்படத்தில் பிரபு, சிவகுமார், ராதிகா, சரண்யா, விக்னேஷ், யுவராணி, பொன்வண்ணன், வடிவேலு என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர். முதல் மரியாதையில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியதோடு போட்டோகிராஃபராக ஒரு சிறிய வேடத்தில் நடித்த இளவரசு இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியதோடு முக்கிய வில்லன் வேடத்திலும் நடித்தார்.

நாம் தமிழர் சீமான் இப்படத்தில் தான் கதைவசனம் எழுதி தமிழ்த் திரையுலகில் நுழைந்தார். விதவை மணத்தையும் குடும்ப உறவுகளின் ஒற்றுமையையும் பேசிய சிறந்த கதை சீமானுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.





ஏப்ரல் 22ம் நாளன்று சிவாஜிக்கு செவாலியர் விருது வழங்கும் விழா நடந்தது.


ஒன்ஸ்மோர் - 4.7.1997 


சிவாஜியும் சரோஜாதேவியும் இணைந்து இருவர் உள்ளம் படத்தின் கதாப்பாத்திரங்களை புதிய திரைக்கதையில் புதிய திரை வடிவில் Oncemore நடித்துப் பார்த்த படம்.கலைஞர்கள் ரசிகர்களிடம் கேட்ட Oncemore, more times ரசிக்கப்பட்டது.

சிவாஜியின் 300வது படமாக வெளிவந்த இந்த படத்தோடு  VIP, நேருக்கு நேர் ஆகிய படங்களும் சிம்ரனின் அறிமுக படங்கள் என்று சொல்லப்பட்டன.


விஜய், கமல், பழம்பெரும் இயக்குனரும் ஒன்ஸ்மோர் படத்தின் தயாரிப்பாளருமான சி.வி.ராஜேந்திரன், படத்தின் இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோருடன் சிவாஜி.





1997ல் தாதா சாகேப் பால்கே விருது பெறும் சிவாஜி



ஒரு யாத்ரா மொழி - 13.9.1997

சிவாஜி, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு தமிழ்நாட்டு தந்தையாக தமிழிலேயே பேசி நடித்த படம் இது.இப்படத்தில் இளையராஜா சிவாஜிக்கு பின்னணி பாடியிருப்பது வியப்பு. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்கை சிவாஜி பேசும் வசனமாகவே படத்தில் பதிவு செய்திருப்பார்கள். படத்தின் இயக்குனர் பிரதாப் போத்தன்.















































என் ஆச ராசாவே - 28.8.1998




நாட்டுப்புற நடனக் கலைஞர்களாக சிவாஜியும் முரளியும் நடித்த படத்தில் கலைஞர்களின் கலைப்பற்று, அவர்களுக்கு இருக்கும் மதிப்பு மற்றும் சமூகரீதியான அதன் முரண் ஆகியவை பேசப்படுகின்றன. எழுதி இயக்கியவர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா.

மலேசியா வாசுதேவன் இப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடகர் விருது பெற்றார்.  ஒன்ஸ்மோர், என் ஆச ராசாவே இரண்டு படங்களுக்கும் இசை தேனிசைத் தென்றல்  தேவா. 











மன்னவரு சின்னவரு - 15.1.1999

அர்ஜுனின் 100வது படமாக வெளிவந்த இப்படத்தில் அர்ஜுனின் தந்தையாக நடித்திருந்தார் சிவாஜி. அர்ஜுனும் சவுந்தர்யாவும் நடித்த சுபவார்தா தெலுங்கு படத்தின் ரீமேக், சிவாஜி, விசு ஆகியோர் நடித்திருந்தும் டப்பிங் படம் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்ததால் தோல்வியைத் தழுவியது. இன்று யூட்யூப் இணையதளத்தில் நல்ல குடும்ப படம் என்ற விமர்சனத்துடன் கணிசமான பார்வையாளர்களைப் பெற்று வருகிறது.









படையப்பா - 10.4.1999


சூப்பர் ஸ்டார் ரஜினியின் தந்தையாக கௌரவ வேடத்தில் சிவாஜி நடித்த படம் படையப்பா. ரஜினியின் தொடக்க காலம் தொட்டு சிவாஜியுடன் அவர் நடித்த படங்கள் அவரது அவ்வப்போதைய செல்வாக்கு நிலையைப் பறைசாற்றும் விதமாக இருக்கும்.

அந்த வகையில் தன் வெள்ளிவிழா ஆண்டின் படமாக, தன்னைத் தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக பறைசாற்றிக்கொள்ளும் படத்தில் சிவாஜி நடிக்க வேண்டும் என விரும்பி அவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டார் ரஜினி. சிவாஜியும் பெருந்தன்மையுடன் ரஜினியின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டார்.








பூப்பறிக்க வருகிறோம் - 17.9.1999

சிவாஜி நடித்து கடைசியாக வெளியான படம் இது.அனால் சிவாஜி கடைசியாக நடித்தது படையப்பா தானம்.

Bade Miyan Chote Miyan படத்தில் அமிதாப் காஸ்ட்யூம் போல போட்டு கலக்குவார் சிவாஜி. 











அமிதாப்பின் குணச்சித்திர வேடங்களிலும் சிவாஜியின் பாணியை காண முடியும். அதுவும் இன்றைய அவரது முதிர்ச்சியான வேடங்கள் 3 தேசிய விருதுகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.





அஜய், மாளவிகா ஆகியோருடன் ரகுவரன் சிவாஜியுடன் நடித்த ஒரே படம் இது. மூத்த நடிகர் எம்.என்.நம்பியார் சிவாஜிக்கு தம்பியாக நடித்தார். எம்ஜியாரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திலும் அவர் நடித்திருந்தார் என்பது சிறப்பு வாய்ந்த செய்தியாகும்.





திங்கள், 29 மே, 2017

திரை போடாத திரை நண்பர்கள்

ராஜ்கபூரின் மகன் ரிஷி கபூருடன் ஷஷி கபூர், அமிதாப் 
இயக்குனரும் தன் அண்ணனுமான ராஜ்கபூருடன் ஷஷி கபூர், அமிதாப் 

















 ஷஷி கபூர் அவர்கள் சிறந்த நடிகர் மட்டுமல்ல,உயர்ந்த நண்பரும் ஆவார்.அவரும் அமிதாப் பச்சனும் 12 படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

இணையில்லாத இந்த இணை இணைந்து படைத்த திரைப்படங்கள் சிறந்த கலைப்படைப்புகளுக்கு எடுத்துக்காட்டுகளாகவும் முன்மாதிரிகளாகவும் விளங்கின.

Roti Kapada Aur Makaan(1974)

ஷஷி கபூரும் அமிதாப் பச்சனும் முதன்முதலில் இணைந்து நடித்த படம்.மனோஜ் குமார் கதாநாயகனாக நடித்ததுடன், எழுதி இயக்கி தயாரித்திருந்தார்.மனோஜ் குமாரைக் காதலிக்கும் ஜீனத் அமன், மனம் மாறி மணக்க விரும்பும் தொழிலதிபராக ஷஷி கபூரும் மனோஜ் குமாரின் தம்பியாக அமிதாப் கௌரவ வேடத்திலும் நடித்தனர்.

அமிதாப் முதல் பாதியில் வேலையில்லா பட்டதாரியாகவும் பின்பாதியில் கையை இழந்த ராணுவ வீரராகவும் நடித்தார். Angry Young Man வேடங்களில் அதிரடி நாயகனாகத் தோன்றிய அமிதாப் பச்சன் அவற்றுக்கெல்லாம் முன்னோட்டமாக,முதன்முதலில் ஏற்ற சிறிய வேடம் இது.

ஆனால் ஷஷி கபூர் அறிமுகமாகி பத்தாண்டுகளுக்கு மேலாகியிருந்தது.தன்னைக் கதாநாயகனாகவும் சிறந்த நடிகராகவும் நிலைநிறுத்தி இருந்தார்.

புரட்சிகரமான சமூகக் கருத்துகள் கொண்ட இப்படம் பெருவெற்றி பெற்றது.படத்தின் இறுதிக்கட்டத்தில் மட்டுமே சில காட்சிகளில் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்திருந்தது.



Deewaar(1975)

சலீம்-ஜாவேத் எழுதி யஷ் சோப்ரா இயக்கிய இப்படம் Key Of Indian Cinema என்று பாராட்டப்பட்டது.

இதில் ஷஷி கபூரும் அமிதாப் பச்சனும் முரண்பட்ட இரு பாதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட சகோதரர்களாக நடித்தனர்.சட்டத்த்தைக் காக்கும் காவல்துறை அதிகாரியாக ஷஷி கபூரும் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்து பணம் சம்பாதிக்கும் கடத்தல்காரராக அமிதாப் பச்சனும் நடித்திருந்தனர்.

உண்மையில் மூத்தவரான ஷஷி கபூர் இளைய சகோதரராக நடித்திருந்தார்.இந்திய சினிமாவின் முதல் Gangster படமான இதில் காவல்துறை அதிகாரி-கடத்தல்காரர் வேடங்கள் சரிசமமாகக் கையாளப்பட்டிருக்கும்.இதன் தமிழ் மறு உருவாக்கமான 'தீ' உட்பட வேறெந்த படத்திலும் இல்லாத சிறப்பு அது.அதனால் தான் தீவார் உச்சத்தில் வைத்து உச்சிமுகர்ந்து பாராட்டப்படுகிறது.

வேலைவாய்ப்பின்மை,சுரண்டல்,சமூகத்தின் தீமையால் பாதிக்கப்பட்டு தவறான வழியில் செல்வதால் ஏற்படும் விளைவு,ஏழைகளின் இயலாமையால் நடக்கும் துயரம்,தவறு செய்பவனின் தாயின் தவிப்பு எனப் பல    உணர்வுகள்  இப்படத்தில் பேசப்பட்டன.


மணிரத்னம் தன்னுடைய நாயகன் திரைப்படத்தில் இக்காட்சியை மிகச்சிறப்பாக நகலெடுத்திருந்தார் என்று கூறினால் மிகையாகாது.



Kabhi Kabhie(1976)

நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அல்லது மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றாலும் உங்கள் நேரத்தை  இப்படத்துடன் பகிர்ந்து கொள்ளலாம்.

கோபக்கார வாலிபன் அமிதாப் பச்சன் மென்மையான காதலனாகவும் பாசமுள்ள தந்தையாகவும் பொறுப்புள்ள குடும்பத்தலைவராகவும் யஷ் சோப்ரா இயக்கத்தில்  உருமாறி இருந்தார்.அமிதாப்பின் கலையுலக வாழ்வில் இப்படம் ஒரு மணிமகுடம்.தற்காலப் படங்களில் அவர் பங்குபெறும் முதிர்ச்சியான வேடங்களுக்கும் முதன்மையானது.

ஷஷி கபூர் எப்போதும் மகிழ்வோடும் உற்சாகத்தோடும் பண்போடும் இருக்கும் கதாப்பாத்திரத்தில் வெளுத்து வாங்கி விட்டார்.தன் அண்ணன் ராஜ்கபூரின் மகன் ரிஷிகபூருக்கு தந்தையாக நடித்தார்.

வஹீதா ரஹ்மான்,ராக்கி குல்சார்,நீது சிங் ஆகிய பெண் முதன்மை நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேடங்களை உணர்ந்து இயற்கையாக நடித்து இனிமை சேர்த்திருந்தனர்.அரியதும் இனியதுமான இக்காதல் கதை,அழகியல் நிறைந்து அனைவரும் விரும்பும் வகையில் சிறந்திருந்தது.



Immaan Dharam(1977)

இப்படத்தில் தான் அமிதாப் பச்சன்,ஷஷி கபூர் இணையுடன் சஞ்சீவ் குமார் முதன்முதலாக இணைந்தார்.

சமூக சிந்தனையுடன் சலீம்-ஜாவேத் எழுதிய இப்படத்தில் பொய்சாட்சி கூறிப் பிழைப்பவர்களாக ஷஷி-அமிதாப் நடித்திருந்தனர்.அவர்களால் பாதிக்கப்பட்டு,பின்னர் அவர்கள் திருந்தி நல்லவர்களாக வாழக் காரணமாக விளங்கும் முக்கிய வேடத்தில் சஞ்சீவ் குமார் நடித்தார்.

கட்டடம் கட்டும் தமிழ்ப்பெண் தொழிலாளியாக ஜெமினி கணேசன் மகள் ரேகா ஷஷி கபூரின் இணையாக நடித்திருந்தார்.கவர்ச்சி நடன நடிகை ஹெலன் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வந்து மனதை உருகச் செய்தார்.சமூகச் சிந்தனைகளுடன் சமயச் சிந்தனையும் பேசிய இப்படம் சலீம்-ஜாவேத் படங்களில் வியக்கத்தகுந்த பெருமை வாய்ந்த படமாகும்.

இப்படத்தின் பாதிப்பிலேயே பாக்கியராஜ் 1981ல் பொய்சாட்சி என்ற படத்தை எடுத்தார்.


Trishul(1978)


சஞ்சீவ் குமார்,வஹீதா ரஹ்மான்,அமிதாப் பச்சன்,ஷஷி கபூர்,ஹேமமாலினி,ராக்கி குல்சார்,பூனம் தில்லோன்,பிரேம் சோப்ராஆகியோர் நடித்த,சலீம்-ஜாவேத் கதை வசனத்தில்,யஷ் சோப்ரா இயக்கத்தில் உருவான  இப்படம் தன்னொழுக்கத்தையும் தன்முனைப்பையும் தன்மான உணர்ச்சியையும் பறைசாற்றியது.

தன் தாயின் வற்புறுத்தலின் பேரில்,வஹீதா ரஹ்மானை கைவிட்டு,பணக்கார முதலாளியின் மகளை மணம் புரியும் சஞ்சீவ் குமார்,அவரைப் பழிவாங்கத் துடிக்கும் மூத்த மகன் அமிதாப்,அவரின் இரண்டாவது மகன் ஷஷி கபூர் ஆகியோருக்கு இடையேயான உணர்ச்சிப் போராட்டமே கதை.  

பணத்திற்காக மனதை மாற்றிக்கொள்ளும் கோழையாகத் தொடங்கி,கௌரவமும் கர்வமும் தலைக்கேறிய பெரிய மனிதராக வாழ்ந்து,இறுதியில் மனம் திருந்தி,தன் மூத்த மகனுக்காக உயிர்துறந்து நெகிழவைக்கும் பாத்திரத்தில் நடிப்பின் சிகரத்தில் தன் கொடியை உயரப் பறக்கவிட்டார் சஞ்சீவ் குமார்.

தன் ''முறையற்ற தந்தை''யை, தொழிலில் தோற்கடித்து,அவரது குடும்பத்தைப் பழிவாங்கத் துடித்து பின்னர் அவ்வெண்ணம் மறைந்து,பணத்தை விட குணமே சிறப்பு என்று புரியவைத்து,இறுதியில் அவரை ஏற்றுக்கொள்ளும் பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அமிதாப்.

அமிதாப் என்ன செய்தாலும் அதை அகம் நகும் நட்புடன் அணுகும் மென்மையும் மேன்மையும் கொண்டவராக ஷஷி கபூர் சிறந்த பாத்திரத்தை ஏற்றிருந்தார்.தன் தங்கையின் திருமணத்தை,தந்தையின் அனுமதியின்றி நடத்த முனையும் அமிதாப் மீது கோபப்பட்டாலும் இறுதியில் உண்மை தெரிந்து தன் மூத்த சகோதரனை வாஞ்சையுடன் அணைத்துக்கொள்ளும் அன்பான சகோதரராக நெஞ்சைத் தொட்டிருந்தார்.

இப்படத்தில் மூன்று பாடல்களை ஜேசுதாஸ் பாடியிருந்தார்.அதில் ஒரு பாடல் படத்தில் இடம்பெறவில்லை.



Kaala Patthar(1979)

தீவார்,திரிசூல்,வரிசையில் சலீம்-ஜாவேத்-யஷ் சோப்ரா-அமிதாப்-ஷஷி கபூர் கூட்டணியில் மூன்றாவது மற்றும் கடைசி படம்.நிலக்கரி சுரங்கத்தைப் பற்றிய கதை.தொழிலாளராக அமிதாப்,தொழிலாளர் நலம் நாடும் அதிகாரியாக ஷஷி கபூர்,தொழிலாளர்களைச் சுரண்டும் முதலாளியாக பிரேம் சோப்ரா நடித்திருந்தனர்.


Suhaag(1979)

கதாநாயகர்களின் வீரசாகசப் படங்கள் அனைத்திற்கும் மன்மோகன் தேசாயின் படங்களே முன்னோடி.அதிலும் இது செம படம்.கண்ணிழந்த ஷஷி கபூரின் காவலர் பணியை அமிதாப் செய்வதும் அம்ஜத் கான் உயிருடன் இருக்கும்போதே கண்தானம் செய்வதும் உச்சபட்ச காமெடி.


Do Aur Do Paanch(1980)

ஷஷி கபூரும் அமிதாப் பச்சனும் நடித்த முழுநீள நகைச்சுவைத் திரைப்படம் இது.செல்வந்தர் ஒருவரின் மகனைக் கடத்த பாட்டு வாத்தியாராக ஷஷி கபூரும் P.T. வாத்தியாராக அமிதாப் பச்சனும் வேடமிட்டு, பள்ளிக்குள் நுழைந்து போடும் போட்டியே கதை.தேவர் பில்ம்ஸ் தயாரித்த படத்தை ராகேஷ் குமார் இயக்கியிருந்தார்.



Shaan(1980)

காவல்துறை அதிகாரியாக இருந்த அண்ணனைக் கொன்றவர்களை அவரது சகோதரர்கள் பழிவாங்கும் கதை.அண்ணனாக சுனில் தத்தும் சகோதரர்களாக ஷஷி கபூரும் அமிதாப்பும் நடித்த இப்படம் ஷோலே படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து ரமேஷ் சிப்பி-சலீம்-ஜாவேத் இணைந்து இப்படத்தை உருவாக்கினர்.மனதை மகிழ்விக்கும் அருமையான பாடல்கள் கொண்ட படம்.ஷோலே படத்தில் விதவையின்  காதலை கனத்த கவிதையாகச் சொன்ன சலீம்-ஜாவேத் இப்படத்தில் வில்லன்களால் மனைவியை இழந்த சத்ருகன் சின்ஹாவுக்கும் கணவரை இழந்த ராக்கி குல்சாருக்கும் இடையே போகிற போக்கில் மென்மையான உறவை இழையோட விட்டிருப்பது சிறப்பு.

Silsila(1981)

ஷஷி கபூர் இப்படத்தில் கதாநாயகனாக இல்லாமல் முக்கிய வேடத்தில் தோன்றி நடித்திருந்தார்.அமிதாப்-ஜெயா பாதுரி-ரேகா ஆகியோரின் உண்மை வாழ்வினைப் படம் பிரதிபலிப்பதாகச் சொல்லப்பட்டது.முக்கிய வேடத்தில் சஞ்சீவ் குமாரும் நடித்திருந்தார்.ரேகா அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த கடைசி படம்.யஷ் சோப்ரா இயக்கத்தில் உருவான இப்படத்தில் லதா மங்கேஷ்கருக்கு போட்டியாக 'நீலா ஆஸ்மான் ஸோ கயா' என்ற மெலடி பாடலையும் தன் தந்தை ஹரிவன்ஷ்ராய் பச்சன் எழுதிய கொண்டாட்டப் பாடலான 'ரங் பர்ஸே' என்ற பாடலையும் பாடி அசத்தியிருந்தார்.





Namak Halaal(1982)

பிரகாஷ் மெஹ்ரா இயக்கிய இப்படம் ஷஷி கபூர்-அமிதாப் கதாநாயகர்களாக இணைந்த கடைசி படம்.ஷஷி கபூர் முதலாளியாகவும் அமிதாப் அவரது விசுவாசமான வேலைக்காரனாகவும் நடித்த இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும் சிறந்த நகைச்சுவைக் காட்சிகள், பாடல் காட்சிகள் நிறைந்தது.

Akayla(1991)

1983 முதல் 1990 வரை இருவரும் இணைந்து நடிக்கவில்லை.1991ல் அமிதாப்,ரிஷி கபூர் நடித்த அஜுபா திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தார் ஷஷி கபூர். 

அடுத்து,ரமேஷ் சிப்பி இயக்கத்தில் சலீம் கான்(சலீம்-ஜாவேத் இரட்டையரில் ஒருவர்) எழுத்தில் உருவான இப்படத்தில் அமிதாப்பின் மேலதிகாரியாக,காவல்துறை உயரதிகாரியாக கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் ஷஷி கபூர்.இவர்கள் இணைந்து பணியாற்றிய கடைசி படம் என்ற வகையில் சிறப்பு பெற்ற படம் இது.



ஞாயிறு, 21 மே, 2017

இதயகீதமே எங்கே போனாய்?








































இளங்கலையில்
இயற்பியலை
இலக்காகக்
கொண்டவரே!

தாய்மொழிப் பற்றில்
தமிழிலக்கியங்களோடு
வாழ்ந்தவரே!

முதுகலையில்
பச்சையப்பனின்
பாசறையில்
பைந்தமிழோடு
பழகி
முத்தமிழோடு
விளையாடிய
முத்துகுமரனே!

விருப்பம் தேற்றி
பல வீணைகள் மீட்டிய
பாடல்களை
ஆய்வாகக் கொண்டு
சென்னை பல்கலையில்
முனைப்போடு
முனைவர் பட்டம் பெற்றவரே!

அன்பூட்டும்
அறிவுமதியின்
ஆலோசனையில்
பாடலியற்றப்
பயின்றவரே!

அறியா வயதிலே
உன் அன்னையின்
அன்பு கூட
அரிதாகி விட்டதால்
உன் அன்பு சிறக்க
ஆற்றல் மேம்பட
நல்ல பண்பு தழைக்க
ஊக்கத்தைப்
பரிமாறியது
அன்னை நூலகம்

உன்னை
எப்போதுமே
சுற்றி வந்தது
நண்பர்கள் கூட்டம்
மட்டுமல்ல
நீ நட்பு கொண்ட
இலக்கியமும் தான்

உன் அறை 
பொருட்கள்
நிறைந்தது அல்ல
புத்தகம் 
நிறைந்தது

இயக்குனராவது
உனது எண்ணம்
பல இசைகளுக்கு
பாடல் இயற்றி விட்டது
உன் கைவண்ணம்

உன் பாடல்
பலர் இதயங்களுக்கு
பல்லாக்கு

எல்லோருக்கும்
முதல் எழுத்து அ
நீ மீட்டிய ஆனந்த யாழும்
நீ தீட்டிய அழகும்
உன்னை 
தேசிய விருதுக்கு
அழைத்துச் சென்ற
அதிர்ஷ்ட எழுத்துகள் 
ஆ,அ

உன் குடும்பம்
இழந்தது என்னவோ
உன்னைத்தான்
கலையுலகம்
இழந்து விட்டதோ
இன்னும்
எண்ணில் அடங்காத
உன் எண்ணத்தில்
உதிக்கவிருந்த
பாடல்களை

உன் உயிரை
எடுத்தவனால் 
எடுக்க முடியுமா
ஏட்டில் பதிந்த
உன் கவிதைகளையும்
இசையில் கலந்த
பாடல்களையும்?!

வீரநடையில் தான்
உன் பாடல்
நடை தொடங்கியது
மூங்கில் மரமாய்
வளர்ந்த உன்னை
விதி வந்து
வேரறுத்து விட்டதே!

மஞ்சள் காமாலையை 
மனு அனுப்பி
உன்னை வாங்கி விட்டதே 
மரணம்!

காஞ்சி கன்னிகாபுரத்து
கவிதை நாயகனே!
நீ கண்மூடி
எங்களைக்
கண்கலங்க
வைத்து விட்டாயே!

-கல்யாணமந்தை தா.சரவணன்